Saturday, August 29, 2009

அன்புள்ள திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு

அன்புள்ள திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு, உங்கள் ஆட்சி நடக்கும் இந்திய நாட்டின் கடைகோடியான தமிழகத்தில் வசிக்கும், ஒரு சாதாரண பாமரன் எழுதிக் கொள்வது.
நான் நலமாய் இருக்கிறேன், ஆனால் நான் சார்ந்திருக்கும் இனத்தை சார்ந்த பல இலட்சம் மக்கள் நலமில்லாமல், முள்வேலிக்குள் முடங்கி மூச்சு திணறி கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதத்திற்கு எதிரான போர்; என்ற பெயரில், ஒரு இனத்தையே உருக்குலைக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
நிறைய பேர்; சொல்கிறார்கள் இந்தியா நினைத்தால் போரை நிறுத்தியிருக்கலாம் என்று. அதை நானும் நம்புகிறேன். போரின் போது தமிழகத்தின் பல மூலைகளிலிருந்து, மக்கள் உங்கள் கதவை தட்டினார்கள். ஆனால் ஏனோ நீங்கள் திறக்கவேயில்லை.
இன்னும் பல பேர்; சொல்கிறார்கள் இந்தியாவின் உதவி இல்லாமல் இலங்கை அந்த போரில் வென்றிருக்க முடியாது என்று. ஏன் அமைதியாயிருந்தீர்கள், ஏன் இலங்கைக்கு உதவி செய்தீர்கள் என்றெல்லாம் நான் கேட்க போவதில்லை. நாட்டின் தலைவரான தம் கணவணை, எதிடர்பாராத விதமாக மனித வெடிகுண்டுக்கு பலி கொடுத்த ஒரு மனைவியின் சோகத்தையும் கோபத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
சோனியா காந்தி அவர்களே போர்; முடிந்துவிட்டது, பல இலட்சம் அப்பாவி மக்கள் கொல்லபட்டு விட்டார்கள். இதற்காக நாங்கள் யாரிடமும் கோபப் பட்டு பலனில்லை.
உங்களிடம் யாசித்து நிற்கிறேன். இன்னும் மிச்சமிருக்கும் அந்த தமிழர்களின் வாழ்வுக்கு வழி செய்யுங்கள். ஒரு மனைவியாக கோபத்தில் கொதிக்க தெரிந்த உங்களுக்கு, இரண்டு பிள்ளைக்கு தாய் என்ற முறையில் வாழ்ககைக்காக பேராடிக்கொண்டிருக்கும் மக்களின் அவலங்களை கண்டு நெஞ்சம் உருகும் என்ற நம்பிக்கையோடும், ஒவ்வொரு பெண்ணும் தாயானவள் அந்த தாய்மைக்குரிய பாசமும், நேசமும், இரக்கமும், பரிவும் உங்களிடம் இருக்கும் என்ற நம்பிக்கையோடும் இந்த யாசகத்தை உங்களிடம் கேட்கிறேன்.
நீங்கள் சொல்லாம், அதான் இலங்கை அரசு மறுவாழ்வு திட்டங்கள் எடுக்க முயற்சித்து கொண்டிருக்கிறதே, முகாம்கள் எல்லாம் மிக சிறப்பாக செயல்படுவதாக இந்து பத்திரிகை வெளியிட்டதே என்று. உங்களுக்கு தெரியாதது இல்லை, இருந்தாலும் சொல்கிறேன்.
அங்கே முகாம்களில் தினம் சராசாரியாக ஆறுபேருக்கு மேல் இறந்து கொண்டிருக்கிறார்கள். சாவின் விலை இவ்வளவு மலிவா?.
நோய்வாய்ப் பட்டவர்களும், காயபட்டவர்களும் கண்டுகொள்ள படாமல் இருக்கிறார்கள். முல்லைக்கும் தேர் கொடுத்த தமிழனத்திற்கா இந்த கதி?;
புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பல இளைஞர்களும் இளம் பெண்களும் கொண்டு செல்லபடுகிறார்கள். என்ன ஆகிறார்கள் என்று தெரியவில்லை. சந்தேகத்தின் போணீல் ஒரு சதி வேலை.
வளர்ந்தவர்களாவது தாங்கி கொள்வார்கள். என்ன செய்யும் அந்த மழலை உள்ளங்கள். புத்தகத்தோடு பள்ளிகளில் பாடி ஆட வேண்டிய நேரத்தில் காயங்களோடும், நோயோடும் கம்பி வேலிக்குள் நடப்பது என்னவென்றே தெரியாமல் கலங்கி கொண்டிருக்கின்றன. குற்றம் அறியுமா குழந்தைகள்.
உண்ண போதுமான உணவு இல்லை. கிடைக்கும் அந்த பற்றாத சோற்றிலும் சுகாதாரம் இல்லை.

மழை பெய்து தண்ணீர் புகுவதால் கவலைகளை மறக்க தூங்க கூட முடிவதில்லை. கண்ணீரில் மட்டுமில்லை தண்ணீரிலும் தத்தளிக்கிறார்கள்.
சுத்தம் சோறுபோடும் என்றவன் தமிழன். ஆனால் அங்கு சோறும் இல்லை சுத்தமும் இல்லை. கழிப்பிட வசதி: சொல்ல நினைக்கும் போதே வாய் குமட்டுகிறது. சுத்தமில்லாமல் எங்களை சுத்தமாக துடைத்து போட திட்டமா?

தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் சிங்களரை குடிவைக்க ஆரம்பித்து விட்டார்கள். பறவையின் கூட்டில் பாம்புகள்.
இப்படி இன்னும் பல அவலங்களோடு வாழ்வே வராதா என்ற ஏக்கத்தோடு வாடிப்போய் இருக்கிறார்கள் அந்த தமிழர்கள். ஏன் நீங்கள் அந்த வாழ்வை தருபவராக இருக்க கூடாது. உங்களால் முடியும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் உங்களால் மட்டுமே முடியும்.
செப்டம்பரில் பருவ மழை தொடங்கி விடும். முகாம்கள் எல்லாம் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ளன. குண்டுகளுக்கு தப்பித்த மக்கள் மழைக்கு பலியாகிவிடகூடாது. எனவே வெகு விரைவில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் தங்கள் இடங்களில் முறையாக குடியேற்றப்பட வேண்டும்.
பாதுகாப்பு என்ற பெயரில் பலாத்காரங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதால், தமிழர் பகுதிகளில் உள்ள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.
மரத்தை வைச்சவன் தண்ணீர் ஊத்துவான். ஆனால் வெட்டி சென்றவனே கட்டுப்போடுவானா வேறு வழியில்லை. காயப்பட்டவர்களும், நோயில் விழுந்தவர்களும் முறையாக பேணப்பட வேணடும்.
திரும்பவும் தங்கள் பகுதிகளில் மறுவாழ்வை தொடங்கவதற்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் உடணடியாக செய்து தரப்பட வேண்டும்.
உறவுகள் இன்றி உவகை ஏது. சிதறிப்போயிருக்கிறோம். சிதறிய சொந்தங்களை கண்டுபிடிக்க முறையான தகவல்கள் பெற்றிட வழி செய்திட வேண்டும்.
நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது. எம் எஞ்சிய தமிழினத்தை தழைக்க செய்யும் இளம் உள்ளங்களை நாங்கள் இழந்திட விரும்பவில்லை. விசாரணைகளை வெளிப்படையாகவும் விரைவாகவும் முடித்து மக்களை விடுவிக்கமாறு செய்ய வேண்டும்.
நொந்து போன உள்ளங்களுக்கம் நொறுங்கிய நெஞ்சங்களுக்கும் ஆற்றுபடுத்துதல் செய்ய ஆவண செய்ய வேண்டும்.
மேலும் தொண்டு செய்யவும், துயர் துடைக்கவும் காத்திருக்கும் பல உள்ளங்களுக்கும். நிறுவனங்களுக்கும் உரிய சுதந்திரம் தரப்படல் வேண்டும்.
ஆம்மா, தாயே இதையெல்லாம் தாயுள்ளத்தோடு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு கோடி புண்ணியமாக போகும். உங்க புள்ளைகள் எல்லாம் நல்லாயிருக்கும். ஏங்கள் தமிழினம் என்றென்றும் உங்களுக்கு கடமைப் பட்டிருக்கும்.

இப்படிக்கு,
உங்களையே நம்பியிருக்கும்
உள்ளம் உடைந்து போயிருக்கும்
ஏழைத் தமிழன்
- ஜி.பிலிப் -

No comments:

Post a Comment