Monday, March 27, 2006

மெகா சீரியல்

- க.பொன்ராஜ் -

மெகா சீரியல் - கேட்ட மாத்திரத்திலேயே பெண்களுக்கு சந்தோஷத்தையும் (உற்று நோக்க: சந்தோஷம் கேட்கும் போது தான், சீரியல் பார்க்கும் போது அல்ல) ஆண்களுக்கு (சில கண்ணீர் பார்ட்டிகள் தவிர்த்து) கடுப்பையும் தரவல்ல பலே வார்த்தை இது.சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘விழுதுகள் தொடர்தான் மெகாசீரியல் உலகின் ஆதாம் ஏவாளாக கருதப்படுகிறது. தொடர்ந்து வந்த கேபிள் புரட்சியில் இந்த ஆதாம் ஏவாள் சந்ததி இந்திய மக்கள் தொகையோடு போட்டி போடுவது போல் பல்கிப் பெருகிவிட்டது.விளைவு, பல சேனல்களிலும் சேர்த்து நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களை (தினமும்) பிடித்து கண்ணீர் தேசத்தில் செங்கோலாட்சி (ஆண்களின் பார்வையில் கொடுங்லோட்சி) நடத்தி வருகிறது இந்த மெ.மு.க. (அதாங்க... மெகாசீரியல் முன்னேற்றக் கழகம்.)ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் பொழுதுபோக்கு உலகம்; மிகவும் சிறியது. அதுதான் வரவேற்பறைக்கே வந்து பெட்டிச்சாத்தான் தந்த சீரியல் ஆப்பிளை ஏவாளாய் பெண்கள் விழுங்கியதற்குக் காரணம். பிரிதொரு காரணம், பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்பட வழிவகுக்கிற உறவுகளே மெகாசீரியலின் மையக் கரு என்ற அங்கீகரிக்கப்படத விதி. (எங்கள் தவைவிதியும் அதுதான் என ஆன்டி-மெகாசீயல் பார்ட்டிகள் புலம்பும் சத்தம் கேட்கிறது.)இனி மெகாசீரியலின் ‘உட்டாலக்கடி’ வேலைகள். தமிழ் சேனல்களில் நாளொன்றுக்கு 40 க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாவதில் ஒவ்வொன்றும் தலா 30 நிமிடம் ஒளிபரப்பவதாக உங்கள் காதில் பூ சுற்றப்படுகிறது. (அதுதான் அவங்களோட பிழைப்ப+). உண்மையில் தினமும் காதுகளை பதம்பார்க்கும் டைட்டில் பாடலும், விளம்பரங்களுமே குறைந்த பட்சம் 12 நிமிடங்களை தின்று விடுகின்றன. மீதமுள்ள 18 நிமிடங்களில் அதிகமாய் போனால் ஆறு காட்சிகள். இந்த ஆறு காட்சிகளில் நீங்கள் ஏழு முறை அழுது முடிப்பதற்குள் பல லட்சங்கள் தயாரிப்பாளர்களின் கல்லாவில் விழும் என்பது உங்களுக்குத் தெரியுமா?உதாரணமாக 500 நாட்களில் 250 மணி நேரம் (அதாவது 15,000 நிமிடங்கள்) ஒளிபரப்பாகும் மெகாசீரியல்கள் உண்மையில் 150 மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகிறது. அதாவது வெறும் ஆறு முழு நாட்களில் முடிந்து விடக் கூடிய சீரியல் இரண்டு வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டு உங்கள் பொன்னான நேரத்தை கவரிங் ; நேரமாக மாற்றுகிறது.நீங்கள் நாளொன்றுக்கு குறைந்தது நான்கு மெகாசீரியல்கள் பார்க்கிரீர்கள் என்றால் மேற்கூறிய முறைப்படி கூட்டிக் கழித்துப் பாருங்கள். உங்களை நீங்களே கன்னத்தில் அறைந்து கொள்வீர்கள்.அடுத்ததாக இந்த சீரியல்கள் உறவுகளை மேம்படுத்தல், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து வாழ்தல் என கற்றுக் கொடுத்தாலாவது புண்ணியமாய் போகும். ஆனால் சூழ்ச்சி, பொறாமை, சதி, பழிவாங்கல் என சாத்தானின் வேதங்களையே ஓதுகின்றன. இதையெல்லாம் சீரியஸாக உள்வாங்கிக் கொள்ளும் பெண்களின் மனம் ஏதேனும் குடும்ப பிரச்சனை எனில் அதனை சீரியல் நிகழ்வோடு பொருத்திப் பார்த்து குழம்பி மனச் சிதைவுக்கு ஆளாவதுதான் பரிதாபம்.மகனுக்கு கிரிக்கெட், அம்மாவுக்கு சீரியல் என சில வீடுகளில் முட்டிக் கொள்ளும் போது ரிமோட் சிதறு தேங்காய் ஆவதுமுண்டு. இதனால் தேவையற்ற மனப் புகைச்சல் உண்டாவதுமுண்டு.குறிப்பாக படிக்கின்ற குழந்தைகள் உள்ள வீடுகளில் அவர்களுக்கென தனியறை ஒதுக்கிக் கொடுத்து விட்டு கொட்ட கொட்ட நாம் சீரியல் பார்த்தால் குழந்தைகளுக்கும் டி.வி. பெட்டியில் தான் நாட்டம் வரும். விளைவு மதிப்பெண் குறைவு. மதிப்பெண் குறைந்தால் குழந்தைகளை குற்றவாளி ரேஞ்சுக்கு நிற்க வைத்து ‘டோஸ்‘ விடும் நாம் தவறு நம் பக்கம் இருப்பதை உணர்வதில்லை. நூலைப் போலத்தானே சேலையும் இருக்கும். இந்தச் சூழலில் குழந்தைகள் வளர்ந்தால் தலைமுறை இடைவெளி தவிர்க்க முடியாது போய்விடுகிறது. இதையெல்லாம் விடக் கொடூரம் என்னவெனில், துன்பகரமான சீரியல் நிகழ்வைப் பார்த்து சிலர் கண்கலங்கி விடுவதுதான். சீரியல் ஒரு மாயை என்பதைக் கூட உணர முடியாத இப்படிப்பட்ட வடிகட்டிய முட்டாள்கள் மனநோயாளிகளாகக் கூடிய வாய்ப்பு அதிகம் என்பதுதான் மெகா சீரியல் அரக்கனின் வீரியம் குறித்து விடப்பட்டுள்ள எச்சரிக்கை.இன்னொரு சீரியஸான விஷயம், சித்தி, மெட்டிஒலி என இரண்டு ‘சூப்பர் ராக்கெட் விட்டு மெகாசீரியல் உலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் சன் டி.வி.யின் நிர்வாக இயக்குனரான கலாநிதி மாறனுக்கு பிடிக்காத ஒரே புரொக்ராம்... கரெக்ட்... மெகாசீரியல்தான். இதை அவரே ஒரு வாரஇதழுக்கான பேட்டியில் கூறி இருக்கிறார். இது எப்படி இருக்கு?

No comments:

Post a Comment